உள்ளாட்சி இடைத்தேர்தல்
உணர்த்துவது என்ன
கோவை, தூத்துக்குடி
மாநகராட்சி மேயர் பதவி, கடலூர், விருத்தாசலம், அரக்கோணம், ராமநாதபுரம் ஆகிய 4 நகராட்சி தலைவர் பதவி
உள்ளிட்ட 530 உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த 18-ந் தேதி இடைத்தேர்தல்
நடைபெற்றது. இந்த இடைதேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தலில்
அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கணபதி ப.ராஜ்குமார் தனக்கு
அடுத்தபடியாக வந்த பாரதீய ஜனதா வேட்பாளர் ஆர்.நந்தகுமாரை விட 2 லட்சத்து 91 ஆயிரத்து 343 வாக்குகள்
அதிகம் பெற்று வெற்றி பெற்றார். பதிவான 6 லட்சத்து 453 வாக்குகளில்
கணபதி ராஜ்குமாருக்கு 4 லட்சத்து 20 ஆயிரத்து 104 ஓட்டுகளும், ஆர்.நந்தகுமாருக்கு
1 லட்சத்து 28 ஆயிரத்து 761 ஓட்டுகளும்
கிடைத்தன. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் சி.பத்மநாபன் 31 ஆயிரத்து 965 வாக்குகள்
பெற்றார்.
வேட்பாளரை காணவில்லை, மனு தாக்கல் செய்ய விடவில்லை, மனுவை வாபஸ் பெற மிரட்டல், பா ஜ க வேட்பாளர் அ தி மு கவுக்கு தாவல் என பல புகார்களை பா ஜ கவினர் சொன்னாலும்
தேர்தல் நடை பெற்ற இடங்களில் அ தி மு கவுக்கு கிடைத்த வாக்குக்கள் அந்த கட்சிக்கு கிடைத்த
அமோக வெற்றி எதிர் கட்சிகளை திணற அடித்து இருக்கிறது. பலமமாக யோசிக்க வைத்திருக்கிறது. பெரும்பாலான இடங்களில் மொத்த வாக்குகள் பதிவானதில்
70
சதவிகிதம் வாக்குகளை அ தி மு க அள்ளியிருப்பதே அதற்கு காரணம்.
இது குறித்து கேட்க பா ஜ கவின் தமிழ்நாடு
தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை தொடர்பு கொண்டோம். "நாங்கள் இரண்டு அதிகார மையங்களை
எதிர்த்து இந்த தேர்தலை சந்திக்க வேண்டி இருந்தது. ஒன்று ஆளும்கட்சி, மற்றொன்று மாநில தேர்தல்
ஆணையம். ஆனாலும் எல்லாவற்றையும் மீறி நாங்கள் டெபொசிட் பெற்று இருக்கிறோம். இதையே ஒரு
நல்ல ஆரம்பமாக பார்க்கிறோம் என்றார்.
இந்த தேர்தலை "அ தி மு க ஒருபுறம், மற்ற அனைத்து எதிர் கட்சிகளும் மறுபுறம் என்று பார்க்கலாமா என நாம் கேட்க, அது எப்படி இது பாரதிய
ஜனதா மட்டுமே களத்தில் நின்று, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் போட்டியிட்டது என்றார்.
நீங்கள் தி மு க மற்றும் உங்கள் பரம
எதிரியான காங்கிரஸ் இடம் கூட ஆதரவு கேட்டீர்களே என்ற நம் கேள்விக்கு, அவர்கள் தான் ஆதரவு
தரவில்லையே என்றார் தமிழசை.
தேர்தலில் அ தி மு க பெற்ற வாக்கு சதவிகிதம்
நீங்கள் வைத்த தேர்தல் முறைகேடுகள் என்ற குற்றச்சாட்டை நீர்த்து போக செய்து விட்டதா
என் நாம் கேட்டதற்கு, கொஞ்சம் கோபமாகவே
என்ன சார் பத்திரிகையாளர்களாகிய நீங்களே இப்படி கேட்கலாமா, அது பணம் கொடுத்து வாங்க பட்ட ஒட்டு என்றார்
தமிழிசையின் குற்றச்சாட்டுகளை அப்படியே
மாநில தேர்தல் ஆணையர் சோ அய்யர் அவர்களிடம்
எடுத்து சென்றோம். பொறுமையாக எல்லாவற்றயும் கேட்டவர், "2006ல் உள்ளாட்சி தேர்தல் எப்படி நடந்தது என எல்லாருக்குமே
நன்கு தெரியும், அதன் பிறகு நான் மாநில
தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற பிறகு நடந்த 2011
உள்ளாட்சி தேர்தல் எப்படி அமைதியாக எந்த புகர்களுக்கும் இடமின்றி நடந்தது என்பதும்
அனைவருக்கும் தெரியும்.
அதே போல தான் இந்த உள்ளாட்சி இடைதேர்தலும் அமைதியாக எந்த வன்முறை சம்பவங்களும் இன்றி நடை பெற்றுள்ளது.
அனால் ஒரு சிலர் நடக்காத விஷயங்களை எல்லாம் நடந்தாக கூறுகின்றனர். இப்படி பட்ட பல புகார்களுக்கு
தேர்தல் ஆணயம் விளக்கம் அளித்து அவை பொய்யான குற்றச்சாட்டுகள் என்பதை நிருபித்து இருக்கிறோம்.
பத்திரிகைகளிலும் தொலைகாட்சிகளிலும் பெயர்
வருவதற்காக இப்படி சிலர் செய்கிறார்களா என எனக்கு தெரியாது என்றார் நிதானமாக.
மேலும் அவர் கூறுகையில் “எனக்கு கடவுள் நம்பிக்கை
அதிகம், மறு பிறப்பிலும் நம்பிக்கை
உண்டு. நான் என் மனசாட்சி படி நேர்மையாகவே செயல் பட்டேன், இனியும் அவ்வாறே இருப்பேன்” என்று முடித்தார் சோ அய்யர்.
அ தி மு க தலைமை கழக பேச்சாளர் டாக்டர்
கோ சமரசம் நம்மிடம் "இந்த நூறு நாள் ஆட்சியில் பா ஜ க பலவீனப்பட்டு இருக்கிறது.
இதை இந்தியாவில் நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்களிலும்
பார்த்தோம்.” அதிலும் தமிழ்நாட்டில் பா ஜ க அமைப்பு ரீதியில் மிகவும்
பலவீனமான கட்சி. அது தவிர அந்த கட்சி தலைவர்கள் இடையே நடக்கும் உள்குத்து அரசியலையும்
பார்க்க வேண்டும். அவர்கள் அறிவித்த வேட்பாளர்களில் எத்தனை பேர் அந்த கட்சியின் நீண்ட
நாள் உறுப்பினர்கள் என்பதும் ஒரு கேள்வி. அம்மா அவர்களின் மகத்தான மக்கள் நல திட்டங்கள் இந்த மாபெரும் வெற்றியை அண்ணா தி மு கவுக்கு தந்து
இருக்கிறது. தமிழக மக்கள் எப்போதும் அம்மா அவர்கள் பக்கம்
தான் என்பது மீண்டும் நிருபணமாகி இருக்கிறது
2016 சட்ட மன்ற தேர்தலில் அண்ணா தி
மு க மீண்டும் இமாலய வெற்றியை பெற்று அம்மா அவர்கள் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஆவார்.
இப்போது குறை சொல்லும் எதிர் கட்சிகள் ஒட்டு மொத்தமாக காணமல் போகும் என்றார்.
எது எப்படியோ இந்த உள்ளாட்சி இடைதேர்தலில்
அ தி மு க பெற்ற அமோக வெற்றி மற்றும் அதற்கு கிடைத்த அபரிமிதமான வாக்கு சதவிகிதம் எல்லா
கட்சிகளையும் ரொம்பவே யோசிக்க வைத்து இருக்கிறது. இதுவே நடந்து முடிந்த உள்ளாட்சி இடைதேர்தல் உணர்த்தும் உண்மை


No comments:
Post a Comment