Thursday 2 October 2014

பலன் தருமா பயிர்க்காப்பீட்டுத் திட்டம்?

பலன் தருமா பயிர்க்காப்பீட்டுத் திட்டம்?


மழையையே பெரிதும் நம்பியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் திட்டமாக விளங்குவது பயிர்க்காப்பீட்டுத் திட்டம். இயற்கைச் சீற்றங்களால் பயிர்கள் அழியும்போது விவசாயிகளுக்கு ஏற்படும் பேரழிவை போக்கிடும் திட்டமாக தேசிய வேளாண் காப்பீட்டுத்திட்டம் என்ற பெயரில் பயிர்க்காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வந்தது.

இந்தத் திட்டத்தின்படி, காப்பீடு செய்யப்படும் தொகைக்கான காப்பீட்டுக் கட்டணம், அதாவது பிரிமியம், பயிர் மற்றும் பருவத்திற்கு ஏற்றாற்போல் இரண்டு விழுக்காடு முதல் 3.5 விழுக்காடு வரை இருந்தது. இந்தக் காப்பீட்டுக்கட்டணத்தில், 50 விழுக்காடு தொகையை தமிழ்நாடு அரசே செலுத்தி வந்தது. மீதமுள்ள தொகையை விவசாயிகள் செலுத்தி வந்தனர்.

இந்தத் திட்டத்தை ஒரு முழுமையான காப்பீட்டுத் திட்டமாக கருத முடியாது என்றாலும், மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடனான இந்தத் திட்டம் விவசாயிகளுக்கு பயனுள்ள திட்டமாகவே இருந்தது.

விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருந்த இந்தத் திட்டத்தை, மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென ரத்து செய்து, அதற்குப் பதிலாக தேசிய பயிர் காப்பீட்டுத் திட்டம் என்னும் புதிய பயனற்ற காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம், திருத்திய தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம், வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம் என்ற இரு அம்சங்களை கொண்டதாகும். திருத்திய தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், அந்தந்த இடங்களில் கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்பின் அடிப்படையில் காப்பீட்டுத் தொகையும், காப்பீட்டுக் கட்டணமும் நிர்ணயம் செய்யப்படுகின்றன. தமிழக விவசாயிகளின் பலத்த எதிர்ப்பை சந்தித்த திட்டம் இது.

இது குறித்து தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவன அமைப்பாளரும், பரமத்தி வேலூர் சட்ட மன்ற உறுப்பினர் தனியரசுவிடம் பேசினோம்.


குறைந்த இழப்பீடு, அதிகக்கட்டணம்என்ற அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட புதிய காப்பீட்டுத் திட்டத்திற்கு பதிலாக, பழைய காப்பீட்டுத் திட்டமான தேசிய வேளாண் காப்பீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று தமிழகத்தில் உள்ள விவசாயப் பிரதிநிதிகள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகளுக்கு பல்வேறு நன்மை செய்து வரும் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் இதுகுறித்து தற்போது மீண்டும் மத்திய அரசுக்கு ஒரு கருத்துருவை அனுப்பி, அதன் அடிப்படையில், பழைய பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.  இது தமிழக விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கும் அவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் என்றார்.

நமக்கெல்லாம் சோறு போடும் விவசாயிகளுக்கு நல்லதே நடக்கட்டும்.


No comments:

Post a Comment