Wednesday 15 April 2015

“காலம் செய்யும் கோலம்” பா.ஜ.க.வில் இருந்து ஓரம் கட்டப்படும் அத்வானி

“காலம் செய்யும் கோலம்”

பா.ஜ.க.வில் இருந்து ஓரம் கட்டப்படும் அத்வானி

இந்திய மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர்.  2002 முதல் 2004 வரை இந்தியாவின் துணைப் பிரதமராகப் பணி ஆற்றினார். பாரதீய ஜனதா கட்சி இவரை மே 2009-ல் நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக பரிந்துரைத்தது. வெறும் 2 தொகுதி வெற்றியுடன் ஆரம்பித்த பா.ஜ.க வின் வெற்றிப்பாதை, அத்வானியின் ரத யாத்திரைகளால் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு உயர்ந்தது.



பா.ஜனதா கட்சியை அடித்தளத்தில் இருந்து வளர்த்தவர் அத்வானி. நாடு முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்டு கட்சியை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்றார்.

இந்த நிலையில் சமீப காலமாக பா.ஜனதாவில் அத்வானிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாததை கண்கூடாக காண முடிகிறது. பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு 2013-ம் ஆண்டு பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் கோவாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ஜனதாவின் தேர்தல் பிரசார குழு தலைவராக நரேந்திர மோடியை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டு இருந்தது. நரேந்திர மோடிக்கு முக்கியத்துவம் அளிப்பதை அத்வானி எதிர்த்ததாகவும், அதனால் அந்த செயற்குழு கூட்டத்தை அவர் புறக்கணித்ததாகவும் அப்போது தகவல் வெளியானது. அதோடு கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அத்வானி ராஜினாமா செய்தார். பின்னர் கட்சியின் மூத்த தலைவர்களின் சமரசத்தை தொடர்ந்து அவர் தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றார்.

கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமரானார். அமித்ஷா கட்சியின் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அத்வானி கட்சியின் அனைத்து முக்கியமான பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். கட்சியில் பெயரளவுக்கு ‘வழி காட்டும் குழு’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதில் அத்வானிக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெங்களூருவில் 3 நாட்கள் நடந்து முடிந்த கட்சியின் செயற்குழுவில், முதல் நாள் கூட்டத்தில் அத்வானி கலந்து கொள்ளவில்லை. மற்ற 2 நாட்களில் அவர் கலந்து கொண்டார். ஆனால் இந்த கூட்டத்தில் அவர் எதுவும் பேசவில்லை. உரையாற்ற அவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

அவர் பேசினால் ஏதாவது வெறுப்புக்குரிய கருத்து இடம் பெற்றுவிடுமோ என்று கட்சியின் சில தலைவர்கள் கவலையை வெளிப்படுத்தியதாகவும், அதனால் அவருக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் மற்றொரு கருத்து நிலவுகிறது. இதன் மூலம் பா.ஜனதாவில் அவர் முழுமையாக ஓரங்கட்டப்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

“லால் கிருஷ்ண அத்வானி அவர்கள் பா.ஜ.க.வின் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை தற்போது அலங்கரித்து வருகிறார்” என்று இப்போதும் பா ஜ கவின் அதிகாரபூர்வ இணையதளம் குறிப்பிடுகிறது. தெரிந்தே இதை விட்டு வைத்திருக்கிறார்களா அல்லது வேறு ஏதாவதா என நமக்கு தெரியவில்லை.



பா ஜ க தலைவர்களின் கருத்து
 ‘
“இந்த செயற்குழு கூட்டத்தில் அத்வானி பேசவில்லை. அவர் எங்கள் கட்சியின் மூத்த தலைவர். அவர் விரும்பினால் எந்த நேரத்திலும், கட்சியின் எந்த கூட்டத்திலும் பேசலாம். எங்களுக்கு வழிகாட்டலாம். இது சம்பந்தமாக வெளியாகும் தகவல்கள் தவறானது. கட்சிக்குள் எடுக்கும் சில முடிவுகளை உங்களுடன் (பத்திரிகையாளர்கள்) பகிர்ந்து கொள்ள முடியாது. நாங்கள் என்ன செய்தாலும் அனைவரும் ஒன்று கூடி ஒற்றுமையாகவே முடிவு எடுக்கிறோம்’’ என்கிறார் நிதி மந்திரி அருண்ஜெட்லி.

 ‘‘அத்வானி மூத்த தலைவர், வழிகாட்டி, அவரை நாங்கள் மதிக்கிறோம்’’ என்று கூறுகிறார் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்.

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு தமிழக பா ஜ க தலைவர் "மோடிஜி தனக்கு போட்டியாக இருப்பவர்களை ஒழிப்பதில் கருணாநிதியை விட எக்ஸ்பர்ட்" என்றார்.


அத்வானிக்கு அழைப்பில்லை
இதற்கிடையே பாரதீய ஜனதா கட்சி தொடங்கப்பட்ட நாளான ஏப்ரல் 6ம் தேதி, கட்சித் தலைமையகத்தில் நடந்த விழாவிற்கு, அக்கட்சி மூத்த தலைவர் அத்வானிக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்படவில்லை என்று வெளியான தகவலை, பா.ஜ.க திட்டவட்டமாக மறுத்துள்ளது. கட்சியின் மூத்த தலைவரான அத்வானிக்கு இந்த விழா குறித்து எந்த வித அழைப்பும் வரவில்லையென்றும், ஏன் ஒரு குறுஞ்செய்தி கூட அனுப்பப்படவில்லை என்றும் தகவல் வெளியானது. 

இந்நிலையில், இதை திட்டவட்டமாக மறுத்த பா.ஜ.க மூத்த தலைவர் அனில் ஜெயின், தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அத்வானியின் இல்லத்திற்கே சென்று விழா நடக்கும் நேரத்தைக் குறிப்பிட்டு, விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்ததாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment