Wednesday 15 April 2015

ரகசிய கேமரா - இது கோவா கோல்மால்!

ரகசிய கேமரா - இது கோவா கோல்மால்!


கோவா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிரிதி இராணி அம்மாநிலத்தின் காண்டோலிம் பகுதியில் உள்ள பேப் இண்டியா ரெடிமேட் கடையில் சில துணிகளை வாங்கினார். பின்னர் அந்த உடை தனது உடலுக்கு பொருத்தமாக உள்ளதா? என்பதை சரிபார்ப்பதற்காக கடையினுள் இருந்த உடை மாற்றும் அறைக்குள் நுழைந்தார். அப்போது, வெளியே காத்திருந்த மந்திரியின் உதவியாளர், உடை மாற்றும் அறையை குறிவைத்தபடி ஒரு ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். உடனடியாக, மந்திரி ஸ்மிரிதி இராணிக்கு இது தொடர்பான தகவலை தெரிவித்து எச்சரித்தார். 


இதனையடுத்து, அறையினுள் இருந்து வெளியே வந்த ஸ்மிரிதி இராணி போலீசாருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் அக்கடையில் பணிபுரிந்த ஊழியர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்நிறுவனத்தின் முக்கிய தலைவர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு கோவா போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.

சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ள பேப் இந்தியா நிறுவனம் எங்கள் ஷோரூம்களில் ரகசிய கேமராக்கள் கிடையாது என தெரிவித்துள்ளது.

எங்கள் கடைகளின் எந்த கிளையிலும் ரகசிய கேமராக்கள் கிடையாது. மந்திரி சென்ற கோவா கடையில் கண்காணிப்பு கேமரா மட்டுமே வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மந்திரி ஸ்மிரிதி இராணிக்கு எதிர்பாராத விதத்தில் ஏற்பட்ட அசவுகரியத்துக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ள அந்த அறிக்கையில், பேப் இந்தியா நிறுவனம் பெண் வாடிக்கையாளர்களை மையமாக வைத்து செயல்பட்டு வருவதாகவும், இந்தியாவிலும் உலகளாவிய அளவிலும் இந்நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்களில் சுமார் 70 சதவீதம் பெண்கள்தான். பெண்களின் கண்ணியத்தை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம். அதன்படியே நாங்கள் நடந்து வருகிறோம். எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களுக்கு மற்ற அனைத்தையும்விட மிகவும் மேலானவர்கள்.

கோவா கடை சம்பவம் தொடர்பாக போலீசாரின் விசாரணைக்கு எங்கள் ஊழியர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இதுதவிர, எங்கள் நிறுவனத்தின் சார்பிலும் விசாரணை நடத்தப்படுகின்றது. தவறு நடந்திருப்பது தெரியவந்தால் அதற்கு காரணமானவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் எனவும் கூறப்பட்டுள்ளது.

 துணிக்கடை ஒன்றில் உடை மாற்றும் அறைகளில் ரகசிய கேமரா இருந்ததாக புகார் எழுந்திருக்கும் நிலையில், ஆடைகளை வாங்கும்போது, அவற்றை வீட்டில் சென்று அணிந்து பார்ப்பதே சிறந்தது என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கூறியுள்ளார். இது குறித்து தமிழின் பிரபல நடிகையும் இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான குஷ்புவிடம் கேட்டபோது, இம்மாதிரியான அச்சத்தின் காரணமாக, தான் ஒருபோதும் கடைகளில் இருக்கும் அறைகளில் உடைகளை முயற்சித்துப் பார்ப்பதில்லை என்று தெரிவித்தார்.
ஆனால், பெரும்பாலானவர்கள் கடைகளிலேயே உடைகளை முயற்சித்துப் பார்க்கும் நிலையில், இம்மாதிரி ஒரு சம்பவம் வெளிவந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக குஷ்பு கூறினார். உடைகளை வாங்குபவர்கள், வீட்டிற்கு வந்து அணிந்து பார்த்து, சரியில்லையென்றால் திரும்பக் கொடுப்பதே பாதுகாப்பானதாக இருக்கும் என்கிறார் அவர். அதற்குச் சோம்பேறித்தனப்பட்டுக்கொண்டு, கடைகளிலேயே முயற்சித்துப் பார்ப்பதால்தான் இதுபோல நடக்கிறது என்கிறார் குஷ்பு.

ஆனால், ஒரு பெண் கடைகளில் தவறான இடங்களில் இம்மாதிரி கேமராக்கள் இருப்பதாக நினைத்தால், உடனடியாக காவல்துறையை அணுக வேண்டும் என்கிறார் அவர். தான் அவமானப்படுத்தப்படுவோமோ என்று அஞ்சக்கூடாது என்கிறார் அவர்.

கண்காணிப்பு காமிராக்கள் பொருத்துவதற்கு உணவுக் கடைகள் மற்றும் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் போன்ற இடங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்று கோவா நகரக் காவல்துறை தெரிவித்துள்ளது.
கோவா மட்டுமல்ல பல இடங்களிலும் இது நடந்து கொண்டுதான் இருக்கிறது. காவல் துறை இதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பெண்களும் வெளி இடங்களில் , குறிப்பாக கடைகளில் உடை மாற்றுவதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும் என்றார் வழக்கறிஞர் ஹரி.

பெண்கள் உஷாராக இருக்க வேண்டும்!

No comments:

Post a Comment