Wednesday 15 April 2015

“அக்ரி அரஸ்ட்” - அரண்டு போன அதிமுக தலைகள்

“அக்ரி அரஸ்ட்”


- அரண்டு போன அதிமுக தலைகள்

தவறு செய்தால் தண்டனை என்பது மற்ற கட்சிகளில் எப்படியோ, அ தி மு க வில் கண்டிப்பாக உண்டு. அதற்கு சமீபத்திய உதாரணம் முன்னாள் அமைச்சர் அக்ரி கிரிஷ்ணமுர்த்தியின் அரெஸ்ட். இந்த வழக்கு சி பி சி ஐ டி வசம் ஒப்படைக்க படும்போதே அ தி மு க தலைமை தெளிவான சில உத்தரவுகளையும் வழங்கியது. நேர்மையாக விசாரணை நடக்க வேண்டும். தவறு செய்தது உறுதி செய்யப்பட்டால், யாராக இருந்தாலும் பிடித்து உள்ளே போடுங்கள் என்பதே அது. இந்த வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகளுக்கும் ஒரு தகவல் சொல்லப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த வழக்கில் யாராவது அழுத்தம் கொடுத்தால் அதை உடனே மேலிடத்துக்கு தெரிய படுத்த சொல்லியதுதான், என்கின்றனர் நமக்கு தெரிந்த காக்கி வட்டாரங்கள். அக்ரிக்கு நெருக்கமான சிலர் கூட மேற்படி தகவலால் அலெர்ட் ஆகி அடக்கி வாசிக்க ஆரம்பித்தனர் என போகிறது கதை.



வேளாண்மைத்துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் சென்னையில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கடந்த 5ம் தேதி நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டார். மாஜிஸ்திரேட்டு முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

நெல்லையில் வேளாண்மை துறை உதவி செயற்பொறியாளராக பணியாற்றியவர் முத்துக்குமாரசாமி. இவர் பாளையங்கோட்டை திருமால்நகர் விரிவாக்கப் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருக்கு சரசுவதி என்ற மனைவியும், விஜய், சேதுராம் என்ற மகன்களும் உள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 20-ந்தேதி முத்துக்குமாரசாமி, நெல்லை தச்சநல்லூர் அருகே ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து முதலில் நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். வேளாண்மை துறையில் 7 டிரைவர் பணி நியமனங்களுக்கான உத்தரவை வழங்க முத்துக்குமாரசாமிக்கு நிர்ப்பந்தம் வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலால் அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வேளாண்மை துறை அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதும் புகார்கள் எழுந்தன.

இதே போல் வேளாண்மை துறை தலைமை பொறியாளர் செந்தில் மற்றும் நெல்லையைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர்கள், அதிகாரிகள் சிலரும் முத்துக்குமாரசாமிக்கு நெருக்கடி கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் காரணமாகவே முத்துக்குமாரசாமி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. குற்றச்சாட்டுக்கு ஆளான அக்ரி கிருஷ்ணமூர்த்தி திருவண்ணாமலை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் இருந்தும், அமைச்சர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இதற்கிடையே முத்துக்குமாரசாமியின் குடும்பத்தினருக்கும், தலைமை பொறியாளர் செந்தில் மற்றும் அதிகாரிகள், அ.தி.மு.க. பிரபலங்கள் மிரட்டல் விடுத்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து முத்துக்குமாரசாமியின் மனைவி, மகன்கள் பாளையங்கோட்டையில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு சென்னைக்கு வந்துவிட்டனர்.

முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் பல்வேறு தகவல்கள் கூறப்பட்டாலும், சில வாரங்களாக யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இந்த விவகாரத்தை அரசியல் கட்சிகள், அரசு ஊழியர் அமைப்புகள், சமுதாய அமைப்புகள் கையில் எடுத்து, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று போராட்டங்களில் ஈடுபட்டார்கள்.

முத்துக்குமாரசாமி தற்கொலையில் 12 பேருக்கு தொடர்பு இருப்பதாக கூறி, சி.பி.சி.ஐ.டி. போலீசார், தமிழக டி.ஜி.பி. அசோக்குமாருக்கு அறிக்கை தாக்கல் செய்தார்கள்.

இந்தநிலையில் கடந்த 5ம் தேதி இரவில், முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மை துறை தலைமை பொறியாளர் செந்தில் ஆகியோர் சென்னையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். பல மணி நேரம் அவர்களிடம் நடந்த விசாரணையை தொடர்ந்து, அதிகாலை 3 மணி அளவில் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், தலைமை பொறியாளர் செந்திலும் போலீஸ் வேன்களில் நெல்லைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அன்று ஞாயிற்றுக்கிழமை கோர்ட்டு விடுமுறை என்பதால், நேராக பாளையங்கோட்டை ரகுமத் நகரில் உள்ள நெல்லை 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு செந்தில்குமார் வீட்டுக்கு மதியம் 1.20 மணி அளவில் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ஏராளமான போலீசார், பத்திரிகையாளர்கள் மற்றும் வக்கீல்கள் திரண்டு இருந்தனர்.

வேனில் இருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், தலைமை பொறியாளர் செந்திலும் கீழே இறங்கி வந்த போது, முண்டியடித்துக் கொண்டு பத்திரிகையாளர்கள் படம் எடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று, 1.25 மணிக்கு மாஜிஸ்திரேட்டு செந்தில்குமார் முன்பு ஆஜர்படுத்தினார்கள். இரண்டு பேர் மீதான குற்றச்சாட்டுகளை, மாஜிஸ்திரேட்டு செந்தில்குமார் கூறினார்.

அதாவது, வேளாண்மை அதிகாரி முத்துக்குமாரசாமியை தற்கொலைக்கு தூண்டியதாக இந்திய தண்டனை சட்டம் 306-வது பிரிவின்படியும், கூட்டுச்சதி செய்ததாக பிரிவு 120-பி, லஞ்சம் கேட்டது தொடர்பாக சட்டப்பிரிவு 7-ன்படியும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அது சம்பந்தமாக என்ன கூறுகிறீர்கள்? என்று இருவரிடமும் மாஜிஸ்திரேட்டு கேட்டார்.

அப்போது ‘‘தனக்கும், அந்த வழக்குகளுக்கும் சம்பந்தம் இல்லை’’ என அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். அதேபோன்று, தலைமை பொறியாளர் செந்திலும் கூறினார்.

‘‘உங்களிடம் இருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதே?’’ என்று நீதிபதி கேட்டதற்கு, ‘‘அதில் ஒன்று மட்டுமே எனக்கு உரியது, மற்ற 2 செல்போன்களும் எனக்கு உரியவை அல்ல’’ என்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி பதில் அளித்தார்.

இதையடுத்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி, செந்தில் ஆகியோரை 15 நாட்கள் ஜெயிலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு செந்தில்குமார் உத்தரவிட்டார்.

அப்போது, அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் சார்பில் வந்திருந்த வக்கீல்கள் முத்துராமலிங்கம், ரிஸ்வானா, சுப்பிரமணியன் ஆகியோர் நீதிபதியிடம், ‘‘அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு உடல்நிலை சரியில்லை. அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லை என்றால் அவரை அரசு ஆஸ்பத்திரியிலாவது சேர்க்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு நீதிபதி, ‘அவரது உடல்நிலையை சிறைத்துறை டாக்டர்கள் பரிசோதிப்பார்கள். சிகிச்சை தேவைப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’, என்று கூறினார்.

பகல் 1.50 மணி அளவில் மாஜிஸ்திரேட்டு வீட்டில் இருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், செந்திலும் போலீஸ் வாகனத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அடைக்கப்பட்டனர். முன்னதாக நெல்லைக்கு கொண்டு வரும் வழியில் கங்கைகொண்டான் அருகே, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, செந்தில் ஆகியோருக்கு மதிய உணவை போலீசார் வழங்கினர். இதனால் ஜெயிலில் அவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படவில்லை.

2 பேரும் வருமானவரி செலுத்துகிறவர்கள் என்பதாலும், அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. (திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி) என்பதாலும் அவர்களுக்கு சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில், மொத்தம் 12 பேர் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு உள்ளன. அதில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், வேளாண்மை தலைமை பொறியாளர் செந்திலும் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளனர். மற்ற 10 பேரையும் கைது செய்வதற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

ஏற்கனவே நெல்லையில் முகாமிட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, உள்ளூரைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரபலங்கள் 5 பேரை வரவழைத்து விசாரணை நடத்தினார்கள். மீண்டும் விசாரணைக்கு அழைக்கும் போது வர வேண்டும் எனவும், நெல்லையை விட்டு வேறு எங்கும் செல்லக்கூடாது என்றும் 5 பேரிடமும் அறிவுறுத்தி இருந்தனர். இந்தநிலையில், அவர்கள் மீது கைது நடவடிக்கை கூடிய விரைவில் இருக்கலாம் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.

எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் விடிய விடிய தீவிர விசாரணை நடைபெற்றது. இதையடுத்து காலை 5.00 மணியளவில் அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து, நெல்லைக்கு அழைத்து சென்றனர். அவருடன் வேளாண் துறை பொறியாளர் செந்தில் என்பவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து, நெல்லை அழைத்துச் செல்கின்றனர். அங்கும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்படும் என தெரிகிறது. அநேகமாக நெல்லையை சேர்ந்த 3 முக்கிய புள்ளிகள் இன்று மாலைக்குள் கைதாகலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வேளாண்மை அதிகாரி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த நெல்லை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று மனுதாக்கல் செய்ய உள்ளனர்.

இந்த வழக்கில் மேலும் பல பிரமுகர்கள் சிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறியதாவது:-

முத்துக்குமாரசாமியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு போன் செய்து அதிக நேரம் யார்-யார் பேசினர், தற்கொலை செய்துகொள்வதற்கு சற்று நேரத்துக்கு முன்பாக அவரிடம் பேசியவர்கள் யார், எந்தெந்த அரசியல் பிரபலங்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களிடம் இருந்து அவருக்கு அழைப்புகள் வந்தன என்பது பின்னணி குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
வேளாண்மை துறையில் 7 டிரைவர் பணியிடங்களை வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், முத்துக்குமாரசாமி நியமனம் செய்ததால்தான் அவருக்கு போன் மூலமும், நேரிலும் மிரட்டல்கள் வந்துள்ளன.

முத்துக்குமாரசாமிக்கு 57 வயது ஆகிவிட்டது. அவர் சில மாதங்களில் பணியில் இருந்து ஓய்வு பெற இருந்தார். இந்த நிலையில் அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார் என்றால், வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு அவருக்கு தொல்லைகள் ஏற்பட்டு உள்ளன. ஒருவேளை தனது துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கலாம் என்று நினைத்தால், அந்த துறையின் மேல்மட்டத்தில் இருந்தும் அவருக்கு பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளன.

போலீசாரிடம் புகார் அளிக்க நினைத்தால், உள்ளூர் அ.தி.மு.க. பிரமுகர்கள் தொல்லை கொடுத்து இருக்கிறார்கள். கடைசி வரை தனது முடிவில் பின்வாங்கால் இருந்த முத்துக்குமாரசாமியிடம் இறுதியாக ஒரு அஸ்திரத்தை வீசினார்கள். 7 பணியிடத்துக்கும் சேர்த்து ஒரு பெரும் தொகையை நிர்ணயித்து இருந்தோம். அந்த பணியிடத்தை நிரப்பிவிட்டதால், அந்த தொகையை முத்துக்குமாரசாமிதான் தர வேண்டும் என்று அவரிடம் கேட்டுள்ளனர்.

சில மாதங்களில் பணியில் இருந்து ஓய்வு பெற இருந்த முத்துக்குமாரசாமிக்கு, இந்த மிரட்டல் பெரும் மனநெருக்கடியை ஏற்படுத்தியது. கடைசியில் தனது வருங்கால சேமிப்பு நிதியில் இருந்து குறிப்பிட்ட தொகையை எடுத்துக் கொடுத்து விடுவதாகவும், அந்த பிரச்சினையை விட்டுவிடும்படியும் அவர் கெஞ்சி இருக்கிறார்.

கடைசியில் கடந்த பிப்ரவரி 20-ந்தேதி அலுவலக பணிகளை கவனிக்காமல், மோட்டார் சைக்கிளில் மனக்குழப்பத்துடன் கிளம்பிய முத்துக்குமாரசாமி, நெல்லை பாலபாக்யா நகரில் உள்ள ஒருவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கிருந்த ஆளுங்கட்சியினர் சிலர் அவரை அவதூறாக திட்டியதாகவும், தாக்க முற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அவரது செல்போனை ஆராய்ந்தால், பல நம்பர்களில் இருந்து டிரைவர் பணியிடம் சம்பந்தமாகத்தான் அவரிடம் பேசி இருக்கிறார்கள். தங்களது செல்போனில் இருந்து பேசினால், அதை அப்படியே டேப் செய்து வெளியிடும் பட்சத்தில் பிரச்சினையாகிவிடும் என்று கருதி தங்களுக்கு தெரிந்தவர்கள் போனில் இருந்து, முத்துக்குமாரசாமியிடம் பேசி இருக்கிறார்கள்.

நெல்லையைச் சேர்ந்த போஸ்டர் ஒட்டும் தொழிலாளியின் நம்பரில் இருந்தும் போன் சென்றுள்ளது. அந்த நபரிடம் விசாரணை நடத்தினோம். அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் அவசரமாக போன் செய்ய வேண்டும் என்று போனை கேட்டார். அதனால் கொடுத்தேன். அவர் பேசிவிட்டு, ரீசார்ஜ் செய்து தருவதாக கூறினார். அதனால் பிரச்சினை ஏதும் வராது என்று அப்போது நினைத்தேன் என்று அந்த தொழிலாளி அப்பாவித்தனமாக கூறினார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறினர்.

இந்த வழக்கை வைத்து அரசியல் செய்ய நினைத்த எதிர் கட்சிகளுக்கு அக்ரியின் அரெஸ்ட் பெரிய ஷாக். எப்படி பால் போட்டாலும் அதை அப்படியே சிக்ஸர் அடிச்சிடுறாங்க அந்த அம்மா என்பதே அறிவாலயத்தில் ஹாட் டாக். அக்ரியின் அரெஸ்ட் எபிசொட் அ தி மு க தலைகளை அதிர்ச்யில் உறைய வைத்து இருக்கிறது. அமைச்சர்களும் அவரவர் துறை ரீஅதியில் எந்த சிக்கலும் யாரும் ஏற்படுத்தி விடாதபடி கண்காணிக்கின்றனர். மள மள என தவறுகள் குறைய ஆரம்பித்து இருக்கிறது என்கின்றனர் தலைமை செயலக வட்டாரங்கள்.

இந்த ஆட்சிமனசாட்சி’ யோடு தான் செயல்படுகிறது என்பதற்கு அக்ரி அரெஸ்ட் ஒரு நல்ல உதாரணம். 

No comments:

Post a Comment